உலக அமைதியையும், செழிப்பையும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
4 நாள் பயணமாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்த ராஜ்நாத் சிங், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “உலகில் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யக்கூடிய வலிமையான சக்திகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான நட்பு நாடுகள். வலுவான கூட்டாளிகளாக இருக்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து வளர்ந்துள்ளது. முன்பு, சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் வார்த்தைகள் கவனிக்கப்படவில்லை; ஆனால் இன்று, ஓட்டுமொத்த உலகமும் கூர்ந்து கவனிக்கிறது.
2014 ம் ஆண்டுக்கு முன்பு இந்தியா ‘பலவீனமான ஐந்து’ நாடுகளில் ஒன்றாக இருந்தது. இன்று உலகின் ‘அற்புதமான ஐந்து’ பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தன்னைக் காண்கிறது. 2027 -ம் ஆண்டில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லியின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்க்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படவில்லை.
25 கோடி மக்களை அரசு வெற்றிகரமாக வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு வந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, சில்லறை பணவீக்கம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.54% ஆக குறைந்துள்ளதுடன், அந்நியச் செலாவணி கையிருப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு 675 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக 5,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் நேர்மறையான சுதேசி மயமாக்கப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு நிறுவனங்களால் அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் இந்திய மண்ணில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய, நிலையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, தற்போது கணிசமாக உயர்ந்து ரூ.21,000 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் 2014-ல் 400 ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது 1.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த சாதனைகளுக்கு அரசின் கொள்கைகள் மற்றும் திட்டமிடலுடன் கூடிய மன உறுதியே காரணம். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவை ஒரு வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான தேசமாக உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.