ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மருத்துவர் சந்தீப் கோஷ் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அந்த மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளரான அக்தர் அலி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஊடகப் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் எரியும் நெருப்பில் எண்ணெய்யை சேர்ப்பது போல் சந்தீப் கோஷை மீதான விசாரணை வளையத்தை இன்னும் இறுகச் செய்யும் வகையில் உள்ளன. பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரிடம் ஏற்கெனவே சிபிஐ பல கட்ட விசாரணைகளை நடத்திவிட்டது. இந்நிலையில், மருத்துவமனையின் முன்னாள் ஊழியரின் இந்தக் குற்றச்சாட்டு திகைக்கும் வைக்கும் அளவில் உள்ளது.
அந்த ஊடகப் பேட்டியில் அக்தர் அலி கூறும்போது, “சந்தீப் கோஷ், யாரும் உரிமை கோராத இறந்தவர்களின் சடலங்களை வைத்து வியாபாரம் செய்தார். சஞ்சய் ராய் அவருக்கு மெய்க்காவலர் போல் செயல்பட்டார். சடலங்களை வைத்து அவர் செய்யும் வியாபாரம் தொடர்பாக அவர் மீது ஒரு வழக்கு உள்ளது. அதேபோல் மருத்துவக் கழிவு பொருட்களை அவர் கடத்தி வந்தார். அவரிடமிருந்து அதைப் பெறும் இடைத்தரகர்கள் சட்டவிரோதமாக அதை வங்கதேசத்துக்கு விற்றனர். ஆனால் இந்த குற்றச் செயல்களை நான் எடுத்துக் கூறியும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனது விசாரணை அறிக்கையை நான் சமர்ப்பித்த அதே நாளில் நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். என்னுடன் விசாரணைக் குழுவில் இருந்த இரண்டு உறுப்பினர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவரிடமிருந்து மாணவர்களைக் காக்க என்னால் முடிந்ததை எல்லாம் நான் செய்தேன். ஆனால், எதிலும் நான் வெற்றி காணவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், சந்தீப் கோஷின் நிதி முறைகேடுகள் பற்றி கூறிய அக்தர் அலி, “மருத்துவமனைக்கான அனைத்து டெண்டர்களையும் சுமன் ஹஸ்ரா, பிப்லப் சிங்கா ஆகிய இரண்டு பேர் மட்டுமே பெறுவார்கள். அவர்கள் இருவரும் சந்தீப்பின் நெருங்கிய நண்பர்கள். டெண்டர் பணத்தைப் பெறும் சந்தீப் கோஷ் அதில் தனக்கான 20 சதவீத கமிஷனை எடுத்துக் கொண்ட பின்னரே ஒப்பந்ததாரர்களுக்குத் தருவார். சுமன், பிப்லபுக்கு 12 நிறுவனங்கள் உண்டு. அனைத்துவிதமான டெண்டர்களும் அந்த 12 நிறுவனங்களிடமே செல்லும்” என்றார்.
“சந்தீப் கோஷ் பல பெரும் புள்ளிகளின் ஆதரவைப் பெற்றிருந்தார். அதனால் தான் இரண்டு முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டும் அவர் மீண்டும் மீண்டும் அதே மருத்துவக் கல்லூரியின் முதல்வரானார். சந்தீப் கோஷ் போன்றோர் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள். அவர்களை உடனடியாக காவலில் வைக்க வேண்டும்” என்று முன்னாள் ஊழியர் அக்தார் அலி கூறியுள்ளார்.