புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டி கிராமத்தில் கிறிஸ்தவ நிறுவனத்திற்கு சொந்தமான மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரை சுமார் 800 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும் பின்னர் வீட்டிற்கு கூட்டி செல்லவும் 10-க்கும் மேற்ப்பட்ட பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று பள்ளி வகுப்புகள் முடிந்தவுடன் ரெகுநாதபுரம், புதுக்கோட்டை விடுதி, கிளாங்காடு பகுதியை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்றது. இதில் 40 மாணவ – மாணவிகள் பயணம் செய்தனர். இந்த வேன் புது விடுதி காடம்பட்டி சாலையில் சென்றபோது காடம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதனால் மாணவர்கள் அலறி சத்தம் போட்டனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஒடி வந்து வேனுக்குள் இருந்த மாணவர்களை டிரைவர் உதவியுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஒரே ஒரு மாணவனுக்கு மட்டும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்ப்பட்டது. மற்ற மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். இதுகுறித்து தகவலறிந்த ரெகுநாதபுரம் போலீசார் அங்கு சென்று விபத்தில் தப்பிய மாணவர்களை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ரெகுநாதபுரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.