குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய புவி அறிவியல் விருதுகள்-2023-ஐ வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் 21 புவி அறிவியல் நிபுணர்களுக்கு திரவுபதி முர்மு விருதுகளை அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், “2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைய, கனிம உற்பத்தியில் தன்னிறைவை அடைவது முக்கியம். தேசிய புவி அறிவியல் தகவல் களஞ்சியத்தின் மூலம் புவி அறிவியல் தரவுகளை ஒருங்கிணைத்தல், கனிம வளங்களின் துரப்பணப் பணி, அகழ்ந்தெடுப்பதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நடவடிக்கைகள் நமது இயற்கை வளத்தை நன்கு புரிந்து கொள்ளவும், அதை சரியாக பயன்படுத்தவும் உதவும்.
நீடித்த வளர்ச்சியை நோக்கி நகர்ந்து, நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. கொல்கத்தாவில் தேசிய நிலச்சரிவு முன்னறிவிப்பு மையம் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். நிலச்சரிவு ஏற்படக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தி வெளியிடும். நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகள் குறைந்தபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில் நமது அமைப்புகளை மிகவும் துல்லியமாக மாற்ற வேண்டும்.
இந்தியாவின் புவியியல் வரலாறு அதன் பாறைகள், சமவெளிகள், புதைபடிவங்கள் மற்றும் கடல் படுகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை நமது புவியியல் பாரம்பரியம் என்று நாம் அழைக்கலாம். புவி-சுற்றுலா மற்றும் புவி-பாரம்பரிய தளங்களின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புவி அறிவியல் துறையில் சேர மக்களை ஊக்குவிக்க புவி-சுற்றுலா ஊடகமாக இருக்க முடியும்” என தெரிவித்தார்.
புவி அறிவியலின் பல்வேறு துறைகளில் அசாதாரண சாதனைகள் மற்றும் சிறந்த பங்களிப்புகளுக்காக தனிநபர்கள் மற்றும் குழுக்களை கவுரவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தால் தேசிய புவி அறிவியல் விருது நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.