“மருத்துவமனை தாக்குதல் பின்னணியில் திரிணமூல் கட்சியினர்” – பெண் மருத்துவரின் வழக்கறிஞர் சாடல்

ஆர்.ஜி.கர் மருத்துவமனை மீதான தாக்குதல் பின்னணியில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தான் உள்ளது என்று கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் வழக்கறிஞர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாரியா குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியபோது, மர்ம கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த அறைகள் சேதப்படுத்தப்பட்டன.

இதனிடையே இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொற்றோரின் வழக்கறிஞர் பிகாஷ் ரஞ்சன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளர். அதில் அவர் கூறியிருப்பதாவது: “பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கு இடையில் திரிணமூல் காங்கிரஸ் தனது குண்டர்களை நிறுத்தி வைத்திருந்தது. அந்த குண்டர்கள், போராட்டம் நடத்தியவர்களை பயமுறுத்தவும், அங்கிருந்து கலைக்கவும், சாட்சியங்களை அழிக்கவும் அரசு மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கை கொல்கத்தா போலீஸ் விசாரணை நடத்திய விதத்தை பார்த்த பின்புதான் உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. போலீஸார் இந்த வழக்கை விசாரித்த விதத்தைப் பாருங்கள். மருத்துவமனை நிர்வாகம் முதலில் கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோரிடம் உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் அரை மணி நேரம் கழித்து அவர்களின் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

உடல் கண்டெடுக்கப்பட்ட போது மருத்துமனையில் மருத்துவர்கள் இருந்துள்ளனர். அது தற்கொலையா அல்லது கொலையா என்று அவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது. இந்த வழக்கில் போலீஸார் அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தவில்லை என்பது எங்களின் சந்தேகம். அதேபோல், மருத்துவரின் உடலை விரைவாக தகனம் செய்வதற்கான முயற்சிகள் ஆரம்பத்தில் நடந்தது. ஏனெனில் இதுபோன்ற சம்பவங்களில் உடல் ஒரு முக்கிய ஆதாரம்.

மருத்துவரின் குடும்பத்தினர் அவரது உடலைத் தகனம் செய்துவிட்டதாக கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர் ஆனால் அது பின்னர் நடந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த மாணவத்தலைவர்களான மீனாக்ஷி போன்றவர்களின் தலையீட்டுக்கு பின்பே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உடலை தகனம் செய்வதற்கே முதலில் முயற்சிக்கப்பட்டது. கொல்லப்பட்ட மருத்துவரின் உடலை உடற்கூராய்வு செய்வதற்காக வெளியே கொண்டு செல்ல முயற்சி செய்தது ஏன். இப்போது இது எல்லாம் வெளிசத்துக்கு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதனிடையே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாகவும், கொல்கத்தா மருத்துவனையில் பாலியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறி கீர்த்தி சர்மா ஏன்ற கல்லூரி மாணவியை கொல்கத்தா போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

போலீஸாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட மாணவி தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் படம் மற்றும் அடையாளத்தையும் இணைத்திருந்தார். இது தண்டனைக்குரிய குற்றம். மேலும் தனது இரண்டு சமூக வலைத பகிர்வுகளில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கொண்டும், நேரடியாக முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகவும் இருந்தது.

இந்தப் பதிவுகள் ஆத்திரமூட்டம் இயல்பிலும், சமூகத்தில் அமைதியின்மை, குழுக்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் தன்மை கொண்டது. இதனால் கொல்கத்தா காவல் நிலையத்தில் மாணவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.