தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இளைஞர் அணியின் மாநில செயலாளர் தாம்பரம் அன்சாரி தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றதை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பாலஸ்தீன் காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அத்துமீறலால் இதுவரை 16,500 பேர் பச்சிளம் குழந்தைகள் உள்பட 40,000க்கும் அதிகாமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொடூர தாக்குதலை நடத்தி அப்பாவி பென்களை, குழந்தைகளை, வயதானவர்களை, பத்திரிக்கையாளர்களை கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலையும், அதற்கு துணையாக ஆயுதங்களை வழங்கி ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவையும், முறையாக எந்த முயற்சியும் எடுக்காத ஐ.நா சபையையும் இச்செயற்குழு வண்மையாக கண்டிக்கிறது. மேலும், ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு வர்த்தக ரீதியான தொடர்பு என்ற பெயரில் ஆயுதங்களை அனுப்புவதை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ அமைப்பு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து தொடர்ந்து அத்துமீறியும், அவர்களது வாழ்வை கேள்வி குறியாக்கியும் வருகிறது. எனவே, ஒழுங்கான ஆதாரமில்லாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைப்பதை என்ஐஏ உடனடியாக நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பல குளறுபடிகள் நடைப்பெற்று வருவதாக சந்தேகம் எழுகிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறதா என விசாரனை செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 3.5 % இட ஒதுக்கீட்டை, 7 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரின் மத நம்பிக்கையை குழைக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும், இப்படி மத பிரிவினைகள் உண்டாக்கும் சட்டங்களை தாக்கல் செய்யக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில், மேற்கு மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், இப்ராஹிம் ஷா, ஹுமாயூன் கபீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முபாரக், பொருளாளர் பக்ரூதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.