‘அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்’ – இபிஎஸ்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மேம்பால பணிகளும் அதிமுக ஆட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அதிமுக ஆட்சியில் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அதை ஆமை வேகத்தில் கொண்டு சென்ற திமுக அரசு, தற்போது தான் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள், ரூ.54 கோடி செலவில் பாதி முடிந்த நிலையில், திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதே போல கோவை மேற்கு புறவழிச் சாலை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்க வேண்டுமென்றால், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்து முதல்வர் பங்கேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே முதல்வர் தேநீர் விருந்தில் பங்கேற்றதற்கான காரணம். இதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. தமிழ், தமிழ் என்று முரசு கொட்டும் திமுக 100 ரூபாய் நாணயத்தில் இந்தி மொழி பொறித்திருப்பதற்க்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

திமுகவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை இந்த விழாவுக்கு ஏன் திமுக அழைக்கவில்லை? திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள், தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுகவுடன் இணைந்து விட்டது என்று இபிஎஸ் கூறினார்.