சிவகங்கையில் எஸ்ஐ-யை வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸார்

சிவகங்கையில் காவல்துறை உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடியை போலீஸார் துப்பாகியால் சுட்டுப் பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்த காளைக்கண்மாய் அருகே இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே காரில் வந்த திருப்பாச்சேத்தி அருகே கச்சாநத்தத்தை சேர்ந்த ரவுடி அகிலனை சோதனையிட முற்பட்டனர்.

அந்த சமயத்தில், எஸ்ஐ குகனை வாளால் வெட்டிவிட்டு ரவுடி அகிலன் தப்பிக்க முயன்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் துப்பாக்கியால் அகிலனின் வலது காலில் சுட்டு அவரைப் பிடித்தார். காயமடைந்தை அகிலன் மற்றும் எஸ்ஐ குகனை சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ரவுடி வாளால் தாக்கியதில் காயமடைந்த எஸ்ஐ-யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அகிலன் மீது கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு உள்ளிட்ட 5 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.