மகா விகாஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் (சரத் பவார்) யாரை அறிவித்தாலும், அவர்களுக்கு நான் ஆதரவு அளிப்பேன் என்று சிவ சேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார். கூட்டத்தில் தாக்கரே கூறியதாவது: நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நீங்கள் (மகாயுதி) என்ன செய்தீர்கள், நாங்கள் (மகா விகாஸ் அகாதி) என்ன செய்தோம் என்று விவாதிப்போம். அவர்கள் மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
பாஜகவுடனான எங்களின் கூட்டணி அனுபவத்துக்கு பின்னர், கூட்டணியில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையை பின்பற்றக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த பல தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி அனுபவம், அதிக எம்எல்ஏக்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால் அதிக எம்எல்ஏகள் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.
மகா விகாஸ் அகாதியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நான் அதனை ஆதரிப்பேன். காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மேலும் நான் 50 கோகாக்கல் மற்றும் கத்தார் என்பதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். மக்கள் விரும்புவது எங்களைத் தான்; உங்களை அல்ல என்று தாக்கரே பேசினார்.
மேலும் அவர், நாட்டுக்கான மதசார்பற்ற சிவில் சட்டம் தேவை என்ற சுதந்திரதின உரையில் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி பேச்சுக்கு பதில் அளித்த தாக்கரே இந்த முறை இந்துத்துவாவை விட்டு விட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார். தொடர்ந்து வக்ஃபு வாரிய. சட்டத் திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த தாக்கரே, “பாஜக பெரும்பான்மையுடன் இருக்கும் போது இதனைச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மகராஷ்டிராவில் இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம். மாநிலத்தில் எதிர்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.