கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். வெளிப்புற சிகிச்சை சேவை நடைபெறவில்லை. அதே நேரத்தில் அவசர சிகிச்சை, ஐசியு, பிரசவ பிரிவுகள் இயங்கின.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும், நாடு முழுவதும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று ஜிப்மரில் பணியாற்றும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்கள், நர்சிங் பணியாளர்கள் என 900-க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கவில்லை. அதே நேரத்தில் அவசர சிகிச்சை, ஐசியு, பிரசவ பிரிவுகள் செயல்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகையில், “மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். மருத்துவமனையில் அசதியில் தூங்கிய மருத்துவருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டதால், இனி அசதி ஏற்பட்டால் எங்களால் இரவில் மருத்துமனையில் ஓய்வுக்காக தூங்கவே பயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லை. யார் வேண்டுமானாலும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உள்ளது. மருத்துவர்கள் மீதான வன்முறையை தடுக்க கடும் சட்டம் தேவை. மக்கள் எங்கள் கோரிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்” என்றனர்.
ஜிப்மர் ரெசிடன்ட் மருத்துவர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் சந்தோஷினி, பொதுச்செயலர் ஷோபனா ஆகியோர் கூறுகையில், “ஜிப்மரில் வெளிப்புறசிகிச்சை சேவை, ஆப்ரேஷன் தியேட்டர்கள் ஆகியவற்றில் சேவைகளை காலவரையின்றி நிறுத்தி வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். அவசர கால சேவைகள், அவசர கால ஆய்வக சேவைகள், டயாலிசிஸ், புற்றுநோய் கீமோதெரபி பிரிவுகள், ஐசியு ஆகியவை வழக்கம்போல் செயல்படும்.
சமீபத்திய சம்பவத்தில் நடக்கும் விசாரணை மீது சந்தேகம் எழுகிறது. வெளிப்படையான விசாரணை தேவை. சுகாதார பணியாளர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய பாதுகாப்பு சட்டத்தை அமலாக்க வேண்டும். பெண் மருத்துவரின் கண்ணியத்தையும், உயிரையும் பாதுகாக்க தவறிய பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும். இது சுகாதாரத்துறையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய நேரம்” என்று குறிப்பிட்டனர்.
ஜிப்மர் மாணவர் சங்கத்தின் தலைவர் பாரதி, துணைத்தலைவர் தர்ஷினி கூறுகையில், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை மாணவர்கள் ஆதரிக்கிறோம். நிலைமையை கருத்தில்கொண்டு எம்பிபிஎஸ், நர்சிங், அலைட் ஹெல்த் சயின்ஸ் மாணவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். கல்வி நடவடிக்கைகளில் இக்காலத்தில் ஈடுபட மாட்டோம். அவசர சேவைப்பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டோர் தவிர இதர மருத்துவ சேவைகளில், மருத்துவப்பிரிவுகளில் பணி செய்ய மாட்டோம்.” என்று தெரிவித்துள்ளனர்.