வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்

புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 9.17 மணியளவில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 3 மணியளவில் தொடங்கிய நிலையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ.தொலைவில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் (SiC UVDosimeter) ஆகிய 3 ஆய்வுசாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவிசெய்யும்.

இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டர் விண்ணில் யுவி கதிர்வீச்சு அளவைகண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனிதர்களைவிண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது.

மேலும், எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ளும். இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப்இந்தியா ஸ்டார்அப் நிறுவனம் வடிவமைத்துள்ள 200 கிராம் எடை கொண்ட ‘எஸ்ஆர்-டெமோசாட்’ எனும் நானோ செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.