அரியலூர் ஒன்றியத்தில் சுதந்திர தின கிராம சபை கூட்டங்கள்

அரியலூர் ஒன்றியத்தில், சுதந்திர தின கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உத்தரவுப்படி, அரியலூர் ஊராட்சி ஒன்றியம், எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கான கிராம சபை கூட்டம், அங்குள்ள அண்ணாநகர் நூலகம் அருகே, ஊராட்சி மன்ற தலைவர் சிவா என்கிற பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. கிராம ஊராட்சியில், தூய்மையான குடிநீரை விநியோகம் செய்வது, இணைய வழி மூலம் கிராம ஊராட்சிக்கான வரி உள்ளிட்ட வருவாய் இனங்களை வசூல் செய்வது, தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், உள்ளிட்டவை பற்றி விளக்கி கூறப்பட்ட இக்கூட்டத்தில், பரமேஸ்வரி வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலரும் பேசினார்கள்.

கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அம்பிகா அண்ணாதுரை முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமாரி தீர்மானங்களை படித்தார். வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஓட்டக்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் செங்கமலை தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் சத்தியசீலன் வரவேற்றுப் பேசினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி, வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தாமரைக் குளம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர்  பிரேம்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முத்து தீர்மானங்களை படித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா முத்துவேல், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாலாஜா நகரம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா இளையராஜா தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் தமிழ் குமரன் தீர்மானங்களை படித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குணசேகரன், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 31  ஊராட்சிகள், செந்துறை, ஜெயங்கொண்டம், திருமானூர், ஆண்டிமடம், தா. பழூர் உட்பட, அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 201 ஊராட்சிகளிலும், சுதந்திர தின கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.