வனவிலங்கு – மனித மோதலை தடுக்க நடவடிக்கை : நீலகிரி புதிய காவல் கண்காணிப்பாளர் உறுதி

வனவிலங்குகள் – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட என்.எஸ்.நிஷா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தின் 65-வது காவல் கண்காணிப்பாளராக என்.எஸ். நிஷா இன்று உதகையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகம் ஏற்படும் மாவட்டம் என்பதால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதே போல் இது வனவிலங்குகள் – மனித மோதல்கள் அதிகம் நிகழும் மாவட்டமாக உள்ளதால் அதனைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்” என்றார்.