செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு : அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் மேலும் ஒரு வாரம் கெடு

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டும் பதிவு செய்தது. இந்நிலையில், தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, பதில்மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, அவகாசம் வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது எனவும் அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.