முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் மறைவு – குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் மத்திய அமைச்சர் கே. நட்வர் சிங் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. தனது நீண்ட வாழ்க்கையில், அவர் புகழ்பெற்ற இராஜதந்திரி முதல் ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் வரை பல பதவிகளை வகித்திருக்கிறார். பத்ம பூஷண் விருது பெற்ற நட்வர் சிங், எழுத்தாற்றல் மிக்கவராக திகழ்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கே. நட்வர் சிங்கின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் நாட்டுக்கு சேவையாற்றியவர் அவர். ஒரு சிறந்த எழுத்தாளர், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர். நமது இலக்கிய உலகிற்கும் பொது வாழ்விற்கும் நட்வர் சிங் அளித்துள்ள இணையற்ற பங்களிப்புகள் என்றென்றும் போற்றப்படும். நட்வர் சிங்கின் மனைவி ஹெமிந்தர் கவுர், அவரது மகன் ஜகத் சிங் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “நட்வர் சிங் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ராஜதந்திரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை உலகிற்கு அவர் வளமான பங்களிப்புகளை வழங்கினார். அவர் தமது அறிவாற்றல் மற்றும் எழுத்துத் திறமைக்காக அறியப்பட்டார். இந்தத் துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற இராஜதந்திரியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான கே.நட்வர் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது பல பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கது ஜூலை 2005ல் மேற்கொள்ளப்பட்ட இந்தியா – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். சீனாவைப் பற்றிய அவரது எழுத்துக்கள் நமது ராஜதந்திரத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கின. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் மத்திய அமைச்சர் கே. நட்வர் சிங்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். புகழ்பெற்ற அறிவுஜீவி அவர்; பத்ம பூஷன் பெற்றவர். அவர் இந்தியாவின் இராஜதந்திரம் மற்றும் வெளிவிவகாரங்களில் ஆழ்ந்த பங்களிப்பைச் செய்துள்ளார். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன” என்று தெரிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் 1931ம் ஆண்டு பிறந்த நட்வர் சிங், உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் டெல்லி லோதி சாலையில் உள்ள மின்மயானத்தில் நாளை மேற்கொள்ளப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.