தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது, அதற்கான உடன்படிக்கையில் இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன்மூலம் தமிழக மீனவர்களிடையே ஓர் அச்ச உணர்வினை தோற்றுவிக்க இலங்கை கடற்படை முயல்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க முயலும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அரசுடனான தவறான உடன்படிக்கையின் மூலம் தமிழக மீனவர்களின் வரலாற்று உரிமையை பறிப்பது என்பது நியாயமற்ற செயல். இதற்கு ஒரு நிரந்தர மற்றும் நியாயமான தீர்வினை காணவேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசிற்கு உள்ளது. பிரதமர் மோடி இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும், இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.