பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், தமிழக முதல்வர் பங்கேற்க வாய்ப்புள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
திண்டுக்கல்லில் முதல்வர் தங்கும் இடம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடான பழநியில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் முருக பக்தர்கள், துறவிகள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்க வாய்ப்புள்ளதால், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் திண்டுக்கல் விருந்தினர் மாளிகையில் முதல்வர் தங்குவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர். முதல்வர் 15 நாட்கள் அமெரிக்கா செல்ல மத்திய அரசு ஆகஸ்ட் 22 முதல் அனுமதி வழங்கி உள்ளது. மாநாட்டில் பங்கேற்ற பின் அமெரிக்கா செல்கிறாரா, அல்லது தனக்கு பதிலாக அமைச்சர் உதயநிதியை பங்கேற்கச் செய்கிறாரா என்பது விரைவில் உறுதியாகும்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடந்த வாரம் முதற்கட்டமாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் மாநாடு குறித்து பழநியில் நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் பூங்கொடி ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட எஸ்.பி. அ.பிரதீப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.திலகவதி மற்றும் அறநிலையத்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்த அதற்கான முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மாநாட்டு அரங்கம், உணவுக்கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான அறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். பழநியில் அனைத்து தெருக்களிலும் குப்பையை அகற்றுவது உள்ளிட்ட தூய்மைப் பணிகளில் நகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும். போக்குவரத்து கழகத்தினர் தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யவேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர் பழநி நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் சீரமைப்புப் பணியை மேற்காள்ள வேண்டும். மின்வாரியத்தினர் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று துறை வாரியாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். முதன்முறையாக நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
1,003 பேர் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட பதிவு செய்துள்ளனர். இதில் 36 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். மாநாட்டில் கண்காட்சி, ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.