மேட்டூர் உபரி நீர் திட்டத்தில், மேட்டூர் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டர்கள் மூலம் காவிரி உபரிநீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று தொடங்கி வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ 673.88 கோடியில், சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது..
இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று மாலை 6 மணியளவில் எட்டியது. அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாகவும், நீர் மின் நிலையம், கால்வாய் வழியாகவும் விநாடிக்கு 1,25,500 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் படி, மேட்டூரை அடுத்த திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏரிகள், குளங்களுக்கு நீர் நிரப்பும் பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர், எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருவதை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், சதாசிவம், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் பார்வையிட்டு, ஏரிக்கு வரும் நீரில் மலர் தூவி அதனை வரவேற்றனர்.
காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் திப்பம்பட்டி நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலமாக மேட்டூர், ஓமலுர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள 56 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து விநாடிக்கு 214 கன அடி வீதம் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இங்கிருந்து முதலாவதாக எம்.காளிப்பட்டி ஏரி, ராயப்பன் ஏரி, சின்னனேரி, மானத்தாள் ஏரி, டி,மாரமங்களம் ஏரி நிரப்பப்படவுள்ளது. பின்னர், நங்கவள்ளி குட்டை, வனவாசி ஏரி, கண்கான் ஏரி உள்ளிட்ட 56 ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பப்படவுள்ளது. இதன் மூல 4,016.16 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும் பெறும். இந்த 56 ஏரிகளுக்கும் தண்ணீர் நிரம்புவதை கண்காணிக்க 6 உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை திருச்சி மண்டல பொறியாளர் தயாளகுமார், மேல் காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், சரபங்கா காவிரி வடிநில வட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் பிரபு, வேதநாரயணன், உதவி பொறியாளர்கள் சேதுராஜன், ராஜ்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.