புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 139-வது பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 139-வது பிறந்தநாளினை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; 2021-2022 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக்கோரிக்கையில் இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்த்திருத்த பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இவர்களின் பணியினை சிறப்பிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் திருவுருவச் சிலையினை 10.05.2023 அன்று காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 30.07.1886 அன்று பிறந்தார்கள். அவரது 139-வது பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் இன்றையதினம் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.ஜி.ஏ.ராஜ்மோகன், புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.ஞா.விமலா, வட்டாட்சியர் பரணி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் மரு.இந்திராணி, முள்ளூர் ஊராட்சிமன்றத் தலைவர் வே.ஆதீஸ்வரன், துணை ஊராட்சிமன்றத் தலைவர் நாகராஜன், மருத்துவர்கள்,

செவிலியர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.