புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான உடல் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம் தலைமையில், மருத்துவ குழுவினரால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய, பள்ளி ஆண் குழந்தைகள் நல மருத்துவர் முரளிதரன் மற்றும் பெண் குழந்தைகள் நல மருத்துவர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நலன் குறித்தும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன ரீதியிலான பிரச்சனைகள், உடற் கோளாறுகள் மற்றும் ஊட்டச்சத்து பிரச்சனைகள் குறித்தும் எடுத்துக்கூறினர். இப்பிரச்சினைகளை உரிய நேரத்தில் உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்காத பட்சத்தில் அது ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறினர்.
மேலும் மாணவர்கள் உடலாலும், உள்ளத்தாலும் சுகாதாரமாக இருக்கும் பட்சத்தில் தான் அவர்களால் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதால் அவ்வப்பொழுது மாணவர்களது உடல் நலன்களைக் கண்காணித்து வரவேண்டும் எனவும், குறைபாடு உள்ள மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு அது குறித்து தகவல் தெரிவித்து மாணவர்களது உடல் நலன்களைப் பேணுவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர். மேலும் பெண் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் எடுத்துக்கூறினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.