சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயற்சி : 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) தொடக்கக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை (பேராசிரியர் அன்பழகன் வளாகம்) ஜூலை 29-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை 10 மணியளவில் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை நெருங்குவதற்கு முன்பாக அதன் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்திலேயே கைதுசெய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர். அதேபோல், போராட்டத்தில் பங்கேற்பதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி அருகேயுள்ள லயோலா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த ஆசிரியர்களையும் போலீஸார் கைது செய்து பேருந்துகளில் கொண்டுசென்றனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “ஆசிரியர்களை இவ்வாறு முன்கூட்டியே கைது செய்வது ஜனநாயக விரோதமானது. கடந்த முறை 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது 12 கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உறுதி அளித்தார். ஆனால், இன்று வரை அந்த கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை. தற்போது பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையைும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.

இந்த அரசாணையால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியைகள். எனவே, அரசாணை 243-ஐ உடனடியாக ரத்துசெய்வதுடன் பழைய பென்சன் திட்டம், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உள்ளிட்ட இதர கோரக்கைகளையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றனர்.