இதமான சாரல், ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலத்தில் களைகட்டிய சீசன்

குற்றாலத்தில் இதமான சாரலுடன், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவமழை பெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டம், குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அருவிகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கும்.

இதனால், சாரல் சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் அலைமோதும். நடப்பாண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. சில நாட்கள் சாரல் மழையும், சில நாட்கள் வறண்ட வானிலையும் காணப்படுகிறது. நேற்று காலையில் இருந்துவானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. விடுமுறை தினம் என்பதால் நேற்று காலை முதலே குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் குற்றாலம் பிரதான அருவியில் குளிப்பதற்கு நீண்ட வரிசையில் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனர்.