நிர்வாக சீர்கேடுகளே மின் கட்டண உயர்வுக்கு காரணம் : நுகர்வோர் அமைப்புகள் குற்றச்சாட்டு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் மின் கட்டணத்தை உயர்த்தி மின் நுகர்வோர் மீது சுமையை ஏற்றுவதை தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கண்டித்துள்ளன. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட விதிமீறல்கள் குறித்து தமிழக அரசும் நீதிமன்றமும் தாமாக முன்வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில துணைத் தலைவர் கே.ரவிச்சந்திரன், இந்திய நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டமைப்பு தலைவர் எஸ்.விஜயகுமார், பத்து ரூபாய் இயக்கத் தலைவர் திருமுருகன் ஆகியோர் சென்னையில் இன்று கூட்டாக அளித்த பேட்டியில், “விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கும், மின்சார இழப்பிற்கும் இடையே மிகப்பெரிய அளவில் மின் திருட்டு நடைபெறுகிறது. இது குறித்து நாங்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

விவசாயிகள் தங்களது இலவச மின் இணைப்பை எந்த அளவு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு கள ஆய்வு அடிப்படையிலான தரவுகள் இல்லை. இதனால் இலவச மின்சார பயன்பாட்டிற்கான தொகைக்கும் அரசு மானியமாகக் கொடுக்கும் தொகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இலவச மின்சாரம் கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதாகக் கணக்கு காட்டி, அந்த மின்சாரத்தை சட்டவிரோதமாக நடத்தப்படும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் பெறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. மின்சார வாரிய பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி அவர்கள் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில்லை.

சாதாரண பணியாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை இதே நிலைதான். மின் தளவாடங்களின் தரம் மற்றும் ஆயுட்காலம் உறுதி செய்யப்படுவதில்லை. இதுபோன்ற மின்வாரிய நிர்வாக சீர்கேடுகளால் செலவீனம் அதிகமாகிறது. இதற்கு தமிழக அரசு நிதி வழங்குவதும் மறுபுறம் மின் கட்டணத்தை உயர்த்துவதும் தவறான முன் உதாரணங்கள் ஆகும். மின் கட்டணத்தை உயர்த்தினால் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டு பொருட்களின் விலை உயரும்.

இதனால் பொருளாதார சங்கிலி சிதைக்கப்படுவதுடன் மக்களின் வாங்கும் சக்தி குறையும். தமிழகத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டவிதி மீறல்களை தமிழக அரசும் நீதிமன்றமும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வையும் ரத்து செய்ய வேண்டும்” என அவர்கள் கூறினர்.