புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 புதிய அரசு பேருந்துகளை 3 அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத்துறையின் சார்பில், BS VI – 13 புதிய அரசு பேருந்துகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, தலைமையில் இன்று (24.07.2024) கொடியசைத்து துவக்கி வைத்து, 36 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

புறநகர் பேருந்துகள், ஆலங்குடி – கோயம்புத்தூர், அறந்தாங்கி – மேட்டுப்பாளையம், சிதம்பரம் – மதுரை, தஞ்சாவூர் – மதுரை, காரைக்குடி – திருப்பூர், பட்டுக்கோட்டை – ஏர்வாடி, புதுக்கோட்டை – கோயம்புத்தூர், திருச்சி – நாகர்கோவில், திருச்சி – மதுரை, திருச்சி – மதுரை ஆகிய வழித்தடங்களில் 10 புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் நகரப் பேருந்துகள், பொன்னமராவதி – திருமயம், புதுக்கோட்டை  -வாராப்பூர், கந்தர்வகோட்டை  – கரம்பக்குடி ஆகிய வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த, மகளிர் விடியல் பயணத்தின் மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்பட்டுவரும் 136 நகரப் பேருந்துகளில் தினசரி 1.14 இலட்சம் மகளிர; விடியல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 42,298 இலவச பயண அட்டைகளும் மற்றும் அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு 7,640 இலவச பயண அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு, தமிழ் அறிஞர்கள் மற்றும் அவர்தம் வாரிசுகளுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கி பயனடைந்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசின் மூலம் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, துணை மேயர் லியாகத் அலி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், மேலாண் இயக்குநர் (த.அ.போ.க.) (கும்பகோணம்) கே.எஸ்.மகேந்திரகுமார், பொதுமேலாளர் (த.அ.போ.க.) (புதுக்கோட்டை மண்டலம்) இரா.இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியண்ணன்அரசு (புதுக்கோட்டை), கவிச்சுடர் இராசு.கவிதைப்பித்தன் (கந்தர்வக்கோட்டை), முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் சந்திரசேகரன், உதவி இயக்குநர் (த.அ.போ.க.) செந்தில், துணை மேலாளர்கள் (வணிகம்) சதீஸ்,சுரேஷ்குமார்,தங்கபாண்டியன் (நிர்வாகம்), நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, அரு.வீரமணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.