“வேலை தேடுபவர்களுக்கு நிதியமைச்சகம் உத்வேகம் அளித்துள்ளது” – அமைச்சர் சுரேஷ் கோபி

வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களுக்கும், வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கும் நிதியமைச்சகம் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது என்று பட்ஜெட் குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரிடமிருந்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே மத்திய பட்ஜெட்டை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, “போராட்டம் நடத்துவது எதிர்க்கட்சியினரின் கடமை என்றால், அவர்கள் இதை முன்னெடுக்கட்டும். இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பட்ஜெட். நடுத்தர வர்க்கத்தினரை அரவணைத்துச் செல்வதுதான் தற்போதைய தேவை.

மேலும் இந்த பட்ஜெட்டின் மூலம் நிதியமைச்சகம் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களுக்கும், வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்தப் பட்ஜெட்டை எதிர்க்கட்சியினர் அரசியல் பார்வையில் இல்லாமல், பொதுமக்களின் பார்வையில் அணுக வேண்டும்” என்று சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.