“இடஒதுக்கீடு கோரி தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் தீவிரமாக ஒரு போராட்டம் நடத்தினால்தான், இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என நம்புகிறோம்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று வன்னியர் சங்கத்தின் 45-ம் ஆண்டு விழாவையொட்டி வன்னியர் சங்கத்தின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “1980ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி வன்னியர் சங்கம் துவக்கப்பட்டது. அப்போது 3 கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டது. அதில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். வன்னியர்களின் மக்கள் தொகைக்கேற்ப 20 விழுக்காடும், பட்டியல் இன மக்களுக்கு கொடுக்கப்படும் 18 விழுக்காடுக்கு பதில் 22 விழுக்காடும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் 44 ஆண்டுகளாக 90 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து இட ஒதுக்கீட்டில் நாம் பெற்ற சொற்ப விகிதாச்சாரத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின் 10.5 சதவீத இட ஒதுக்கீடை கடந்த அதிமுக அரசு வழங்கியது. அதை உறுதிப்படுத்த வேண்டுமென்று இந்த அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், நான் நேரில் சென்று முதல்வரை சந்தித்தும் இன்று வரை அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இச்சங்கம் துவக்கி 44 ஆண்டுகள் கடந்து 45-வது ஆண்டுகளில் அடியெடுத்து வைக்கிறோம்.
இடஒதுக்கீடு வேண்டி தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் 7 நாள் சாலைமறியல் போராட்டத்தைவிட தீவிரமாக ஒரு போராட்டம் நடத்தினால்தான் இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என நம்புகிறோம். எனவே, இப்போதுள்ள இளைஞர்கள் ஆர்வமாக, துடிப்புடன் உள்ளனர். இவ்வளவு நாள் வஞ்சிக்கப்பட்டது யாரால்?, எதனால்? என்று தெரியாமல் இருந்ததை இப்போது புரிய வைத்துள்ளோம். இளைஞர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே இப்போராட்டம் முந்தைய போராட்டதைவிட கடுமையாக இருக்கும் என, உங்கள் மூலமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒட்டுமொத்த சமூகமும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ராமதாஸ் கூறினார். அப்போது வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.