சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பிரபல சிவன் கோவிலான அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஶ்ரீஷா குழுவினரின் ஶ்ரீ அரங்கம் சார்பில் அமெரிக்க மாணவிகளும் கலந்து கொண்ட பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையை சேர்ந்த ஶ்ரீஷா தனது சிறுவயது முதலே பரதநாட்டியம் போன்ற கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்டு இருந்தார். தனது சிறுவயதில் இருந்தே முறையான ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்று வந்தார். ஶ்ரீஷாவின் திறமையை கண்டு வியந்து அவரது பெற்றோர்கள் சோலையப்பன் – சந்திரகலா தம்பதியர் ஶ்ரீஷாவின் 9வது வயதிலேயே 1:12:2012 அன்று சென்னையில் புகழ்பெற்ற இராஜா அண்ணாமலை மன்றத்தில் அவரின் குரு ஶ்ரீமதி.தங்கமீனாட்சி முன்னிலையில் அவரின் ஆசிர்வாதத்துடன் சலங்கை பூஜை விழா நடத்தி அரங்கேற்றம் செய்தனர். இவரது தந்தை சோலையப்பன் சென்னை பெரம்பூர் (ஐ.சி.எஃப்) இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தாய் சந்திரகலா அவரது சிறுவயது முதல் நாட்டியம் கற்றவர். மேலும் பிரபல அழகு கலை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவியாக இருந்தபோதே ஶ்ரீஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரதநாட்டியம் நடனம் ஆடி வந்தார். பிறகு சென்னையில் புகழ்பெற்ற கலாஷேத்ரா கல்லூரியில் பயின்று தனது பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்பொழுதே ஏராளமான மாணவிகளுக்கு பரதநாட்டியம் கற்று கொடுத்து வந்தார். அமெரிக்காவில் வசிக்கும் மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து பயிற்சி கொடுத்து கற்று கொடுத்து வந்தார்.
பரதநாட்டியம் பயிற்சி பெற்ற காவியா மற்றும் ஓவியா என்ற மாணவிகள் தங்களின் முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் புகழ் பெற்ற கோவிலில் நடைபெற வேண்டும் என்று பெற்றோர்களான யுவராஜ் – பிரியா ஆகியோரிடம் கூறினர். இதற்கு சரி என்று ஒத்துக் கொண்டு யுவராஜ் மற்றும் பிரியா மாணவிகளை அழைத்து கொண்டு தமிழ்நாடு வந்தனர். இதற்காக சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள புராதன சிறப்பு பெற்ற அகஸ்தீஸ்வரர் கோவிலில் முதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்களுடன் ஶ்ரீஷாவின் ஶ்ரீ அரங்கத்தின் மற்றொரு மாணவியான அசோகன் மற்றும் மகேஸ்வரியின் மகள் ரஸிகா ஆகியோர் சேர்ந்து பரதநாட்டியம் நடனம் அரங்கேற்றினர். பல்வேறு பாவனைகள் நிறைந்த ஏராளமான பக்தி பாடல்களுக்கு அனைவரும் சிறந்த முகபாவனைகளுடனும் நளினங்களுடனும் நடனம் ஆடினர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் அவர்களின் உறவினர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டி உற்சாகப்படுத்தினர்.