சென்னை ஐஐடி-யின் 61-வது பட்டமளிப்பு விழாவில் பிடெக், எம்டெக், எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளில் 2,636 மாணவர்கள் பட்டமும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்பட 444 பேர் பிஎச்டி பட்டமும் பெற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கே.கோபில்கா பங்கேற்றார்.
மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடி-யின் 61-வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர் செயல்பாட்டு மைய அரங்கில் இன்று நடைபெற்றது. ஐஐடி ஆட்சிமன்றக்குழு தலைவர் பவன் கோயங்கா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், 2012-ம் ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிடெக், எம்டெக், எம்எஸ் படிப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ – மாணவியருக்கு பதக்கங்களையும், சிறப்பு விருதுகளையும் வழங்கினார்.
விழாவில், மொத்தம் 2,636 மாணவ – மாணவியர் பட்டம் பெற்றனர். 444 பேர் பிஎச்டி எனப்படும் ஆராய்ச்சி பட்டம் பெற்றனர். அவர்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் விஞ்ஞானி சோம்நாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் மூலமாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்போது ஏற்படும் எலெக்ட்ரான் அதிர்வுகளை குறைப்பது தொடர்பாக அவர் ஆய்வு செய்திருந்தார்.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கோபில்கா பட்டமளிப்புவிழா உரையாற்றி பேசும்போது, “எனது தந்தை பேக்கரி உரிமையாளர். எனது தாய் இல்லத்தரசி. மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். மிக உயர்ந்த இலக்கு, கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றினால்தான் நோபல் பரிசு பெறும் அளவுக்கு என்னால் உயர முடிந்தது. எனது உயிரியல் ஆசிரியர் எனது ஆராய்ச்சி ஆர்வத்தை பெரிதும் ஊக்குவித்தார். தற்போது உலக அளவில் பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தாக்கம் என புதிய சவால்கள் உருவாகியுள்ளன,” என்று குறிப்பிட்டார்.
ஐஐடி ஆட்சிமன்றக்குழு தலைவர் பவன் கோயங்கா தனது தலைமையுரையில், “இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வெகுவிரைவில் 3-வது இடத்தை பிடிக்கும். 2047-ம் ஆண்டு வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்கும் வகையில் நம் நாட்டின் பொருளாதார இலக்கு 30 முதல் 35 டிரில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
பிஎச்டி பட்டம் பெற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசும்போது, “ஐஐடி நுழைவுத் தேர்வை சந்திக்கும் தைரியம் இல்லாத சாதாரண கிராமத்து மாணவனாக இருந்தேன். பெங்களூரு இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி) முதுகலை பட்டம் பெற்றேன். தற்போது ஐஐடியில் பிஎச்டி பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. நான் பிஎச்டி படிக்க அனுமதி வழங்கிய இந்திய விண்வெளித் துறைக்கும் எனது ஆராய்ச்சிக்கு வழிகாட்டிய ஐஐடி பேராசிரியர்களுக்கும் நன்றி,” என்றார்.
முன்னதாக, ஐஐடி இயக்குநர் வி.காமகோடி வரவேற்று ஆண்டறிக்க சமர்ப்பித்தார். அப்போது, “ஐஐடி படிப்பில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கலாசார இடஒதுக்கீடும் வழங்க திட்டமிட்டு வருகிறோம்,” என்றார்.