தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று நேரில் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். தொண்டர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். ஆனந்துக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் போனில் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்தநாளை புஸ்ஸி ஆனந்த் இன்று புதுவை சின்ன மணிக்கூண்டு அருகில் உள்ள அவரின் வீட்டில் கொண்டாடினார். அவருக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் போனில் வாழ்த்துத் தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். வெளிமாநிலங்களைச் சேர்ந்த தவெக தொண்டர்களும் ஆனந்த் வீட்டில் குவிந்ததால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமியும் அந்த நெரிசலில் சிக்கினார். போலீஸார் ஒருவழியாக கூட்டத்தை அப்புறப்படுத்தி முதல்வரை அழைத்துச் சென்றனர். புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு முதல்வர் ரங்கசாமி திரும்பி வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அப்போதும் கூட்டத்தை அகற்றி போலீஸார் அவரை காரில் ஏற்றி அனுப்பினர்.
தமிழகத்திலிருந்து மாவட்ட வாரியாக வந்திருந்த தவெக தொண்டர்கள், புதுவை ரயில் நிலையம் அருகிலிருந்து பேண்டு வாத்தியம், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புஸ்ஸி ஆனந்த் வீட்டுக்கு படையெடுத்தனர். அங்கு அவருக்கு ஆளுயுர மாலை, பூங்கொத்து, பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சிலர் கேக் கொடுத்தும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் தந்த கேக்கை வெட்டிய புஸ்ஸி ஆனந்த், அவற்றை தொண்டர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த தவெக தொண்டர்களால் நகர பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தமிழகம் மட்டுமல்லாது கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தவெக தொண்டர்கள் புதுச்சேரியில் குவிந்தனர். அவர்களில் பலரும் புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்துச் சொல்லி செல்ஃபி எடுக்க போட்டி போட்டனர். தவெக தொண்டர்கள் வந்த வாகனங்களால் நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் அமலில் உள்ளது. பொது இடங்களில் யார் பேனர் வைத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் விதியை மீறி புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்துத் தெரிவித்து நகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகள் அகற்றவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.