எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் காவல் ஆய்வாளர் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் வழக்கின் முக்கிய நபரான பிரவீணும் கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று கைது செய்யப்பட்டனர். கரூர் அழைத்து வரப்பட்ட இவர்கள் இருவரும் சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் கைதுசெய்துள்ள சிபிசிஐடி போலீஸார், இன்று அவரை கரூர் அழைத்து வந்துள்ளனர். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக கடந்த ஏப். 6-ம் தேதி பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததால் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது.

அதன் பிறகு அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த சொத்தானது கடந்த மே 10-ம் தேதி சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஷோபனாவின் தந்தை பிரகாஷ் போலியான ‘நான்டிரேசபிள்’ சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனு அளித்தார்.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் அப்போதைய வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிருத்விராஜ் இதுபோன்ற ‘நான்டிரேஷபிள்’ சான்றிதழ் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இவர் ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளராகப் பணியாற்றியவர்.

இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து கடந்த 5, 7, 11-ம் தேதிகளில் சிபிசிஐடி போலீஸார் கரூரில் பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பத்திரப்பதிவு நடைபெற காரணமான ‘நான்டிரேஷபிள்’ சான்றிதழ் கொடுத்தபோது வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்து தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிருத்விராஜையும் கைது செய்த சிபிசிஐடி போலீஸார், அவரை கரூர் அழைத்து வந்து தனி இடத்தில் தங்கவைத்துள்ளனர்.