“தமிழக மக்களுக்காக பாமக தொடர்ந்து போராடினாலும் மக்கள் என் பின்னால் முழுமையாக வரத் தயங்குகிறார்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கம் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தின் முன் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் தொடர்ந்து தமிழக மக்களுக்காக பாடுபட்டுவரும் பாமகவை ஏனோ மக்கள் ஏற்க முன்வருவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பாமக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் என்னிடம்தான் வருகிறார்கள். அவர்களுக்காக பாமகதான் போராடுகிறது. ஆனாலும் மக்கள் என் பின்னால் முழுமையாக வரத் தயங்குகிறார்கள்.
ஆனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த மக்களும் பாமக பின்னால் வரும்போது ஒளிமயமான எதிர்காலத்தை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மின் கட்டண உயர்வு குறித்து முன்பே பாமக எச்சரித்தது. நேற்று மின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை விலைகொடுத்து வாங்கிவிடுகிறார்கள். அதற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்கள்? இந்த மக்களுக்காக எத்தனை போராட்டம் நடத்தினாலும் தேர்தல் நேரத்தில் நல்ல கட்சியை, வித்தியாசமான கட்சியை கோட்டைக்கு அனுப்பத் தவறிவிடுகிறார்கள்.
ஆனாலும், பாமக தன் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. நாள்தோறும் மக்கள் பிரச்சினைகளுக்காக அறிக்கைவிட்டு வருகிறது. உலகின் 60 நாடுகளில் உள்ள சமூக ஜனநாயகத்தைத்தான் பாமக முன்னெடுத்துள்ளது. இதற்கு ஊடகங்களின் ஆதரவு எப்போதும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அப்போது மாநிலத் துணைத்தலைவர் மொ.ப.சங்கர், அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், சமூகநீதிப் பேரவையின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.