திருவேங்கடம் என்கவுண்டர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது – அன்புமணி ராமதாஸ்

திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த எதிரிகள் காவல்துறை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, அவர்களில் சிலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற ஐயம் எழுந்தது. திருவேங்கடம் சுட்டு கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அந்த ஐயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக முக்கிய கொலை வழக்கில் சரணடைந்த எதிரியை அதிகாலை நேரத்தில் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்ல எந்த தேவையும் இல்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடத்தை சுட்டுக்கொலை செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரவுடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் வாயிலாக, சட்டம் – ஒழுங்கு சீரடைந்துவிட்டதாக காட்ட முயல்வது மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இது தொடர்பாக எழுந்துள்ள ஐயங்களை அரசுதான் போக்க வேண்டும்.

அதற்காக திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நான் வலியுறுத்தியவாறு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.