“ஜம்மு காஷ்மீர் மக்கள், அதிகாரமற்ற, தன்னுடைய உதவியாளரை நியமிக்கக் கூட துணைநிலை ஆளுநரிடம் கைகட்டிக் கெஞ்சும் ரப்பர் ஸ்டாம் முதல்வரை விட மிகவும் தகுதியானர்கள்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் சட்டம் 2019-ஐ திருத்தியிருக்கிறது. இதன் மூலம் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஓமர் அப்துல்லா இவ்வாறு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீரில் தேர்தல் தள்ளிப் போவதற்கான மற்றுமொரு அறிகுறி. இதனால் தான் ஜம்மு காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்வது இந்தத் தேர்தலின் முன் நிபந்தனையாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள், அதிகாரமற்ற, தன்னுடைய உதவியாளரை நியமிக்கக் கூட துணைநிலை ஆளுநரிடம் கைகட்டிக் கெஞ்சும் ரப்பர் ஸ்டாம்ப் முதல்வரை விட மிகவும் தகுதியானர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டப்பிரிவு 370 -ஐ மத்திய அரசின் முடிவினை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் உறுதி செய்ததது. மேலும் 2024 செப்டம்பர் 30-க்குள் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 2014 டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த ஜூன் 2018-ம் ஆண்டு, மக்கள் ஜனநாயக கட்சி, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி முறிந்தது முதல் முதல்வரோ, அரசோ இல்லாமல் இருந்து வருகிறது. அப்போது கூட்டணி சார்பில் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி முதல்வராக இருந்தார்.