உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராட வேண்டும் என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. இந்நிலையில், மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நேற்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சி நிர்வாகிகள் பேசும்போது, ‘இந்தத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்காதது தோல்வி அடைந்ததற்கு காரணம்” என்று தெரிவித்தனர். பின்னர் பேசிய பழனிசாமி, “சிவகங்கை தொகுதியில் 4 சட்டப் பேரவை தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் 2-ம் இடத்தையும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவு வேறு, சட்டப்பேரவை தேர்தல் முடிவு வேறு. 2026 சட்டப்பேரவை தேர்தல் நமக்குச் சாதகமாக இருக்கும். அதை மனதில் வைத்து நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்தோடு பணியாற்ற வேண்டும்.
ஊராட்சி, பேரூராட்சிகளில் கிளைக் கழக அளவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்து போராட்டங்களை நடத்த வேண்டும். கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்” என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.