சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் – பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்று.

இங்கு சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியே ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடி ஏற்ற நிகழ்ச்சியில் தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீ குமார், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.