புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு 7 வது புத்தகத்திருவிழா முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர்( பொ) சண்முகம் கலந்துகொண்டு கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது; மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை 7 வது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நாளை 9ந்தேதி( செவ்வாய்கிழமை) காலை 10 மணிமுதல் 11.00 மணி வரை புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற மாபெரும் நிகழ்ச்சி புத்தக வரவேற்புக்குழுத்தலைவரான மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலுடன் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வகைப்பள்ளிகளிலும், கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களிலும் உரிய நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரு சேர புத்தகம் வாசிக்க பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வினை வெற்றி பெற செய்யவேண்டும். 10 நாட்கள் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு நாளும் மாலையில் நடைபெறும் கலைநிகழ்ச்சியினை ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து கலைநிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவதற்கு தூண்டுகோலாக இருந்து செயல்பட வேண்டும். புத்தகத்திருவிழாவில் கல்வித்துறையின் சார்பில் அதிகப்புத்தகங்கள் வாங்குவதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மாணவர்கள் என கல்வித்துறையினை சேர்ந்த அனைவருக்கும் தகவல் தெரிவித்து அதிகப்புத்தகங்கள் வாங்க செய்து புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறைக்கு பெருமை சேர்க்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ( இடைநிலை) ரமேஷ், புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) செந்தில், தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலர்(பொ) ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் சுதந்திரன், மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் மணவாளன், கவிஞர் ஜீவி, பவுனம்மாள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.