கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் அநீதி; அரசு மன்னிப்பு கோர வேண்டும் – ராமதாஸ்

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகள் திருத்தப்பட்டது பாமகவின் வெற்றி என்றும் சமூகநீதிக்கு செய்த துரோகத்திற்கு திமுக அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு எந்த சமூகப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக் கூடாது என கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் பிறப்பித்த ஆணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் ஜூலை 2 ஆம் நாள் பிறப்பித்த ஆணையில் ‘‘கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம்.

அதேநேரத்தில் பட்டியலின/பழங்குடியின/மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்லூரிக் கல்வி இயக்குநரின் ஆணை சமூகநீதிக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 3-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும்.

இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்” என்று கூறியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து தமது ஆணையை திரும்பப் பெற்றுள்ள கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம், ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்த 22.05.2024-ஆம் தேதியிட்ட உயர்கல்வித்துறை அரசாணை எண் 110-இன்படி, பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் சமூகநீதிக்கு துரோகம் செய்த திமுக அரசு, பொதுவெளியில் அம்பலப்பட்டதால் அதன் தவறை இப்போது திருத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல. மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே தெளிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மாற்றி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தது ஏன்? அவ்வாறு செய்ய அவரைத் தூண்டியது யார்? இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சமூக நீதிக்கு துரோகம் இழைக்க முயன்றதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குநரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கி விட்டு, சமூக நீதியில் அக்கறைக் கொண்ட ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.