இளநிலை நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

இளநிலை நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “NEET-UG தேர்வில் வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களை நம்ப வைக்கும் நோக்கில், அப்பட்டமான இந்த பொய் சொல்லப்படுகிறது. அரசின் இந்த முயற்சியால் அவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது.

“ஒரு சில இடங்களில் மட்டுமே முறைகேடுகள் / மோசடிகள் நடந்துள்ளன” என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. இது தவறானது. பாஜக-ஆர்எஸ்எஸ் கல்வி மாஃபியாவை ஊக்குவித்து ஒட்டுமொத்த கல்விமுறையையும் கையகப்படுத்தியுள்ளது. NCERT புத்தகங்கள் மூலமும் தேர்வுகளில் வினாத்தாள்களை கசியவிடுவதன் மூலமும் மோடி அரசு, நமது கல்வி முறையை அழிக்க குறியாக உள்ளது.

நாங்கள் எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். NEET-UG மீண்டும் நடத்தப்பட வேண்டும். வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும். வினாத்தாள் கசிவு முறைகேடுகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோடி அரசு தனது தவறுகளில் இருந்து விடுபட முடியாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.