ஐந்து தலைமுறையாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப்பாதையை தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதாகவும் இதை ரத்து செய்து சுடுகாட்டுப்பாதையை மீட்டுத்தரக்கோரி சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே மட்டையன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 22 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து தலைமுறைகளாக அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த மயானத்தில் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த நபர்கள் மட்டும் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்து வந்துள்ளனர்.
5 தலைமுறையாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பாதையை தனி நபர்களுக்கு வருவாய் துறையினர் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கியுள்ளதாகவும், இதை ரத்து செய்ய கோரி பலக்கட்ட போராட்டங்களை நடத்தி, இதுவரை ரத்து செய்யாத வருவாய்த்துறையிரை கண்டித்தும், சுடுகாட்டு பாதையை மீட்டு தரக் கோரியும் மட்டையன்பட்டி ஆதிதிராவிட தெருவில் வசிக்கும் கிராம பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மயானத்திற்கு காலம் காலமாக பயன்படுத்தி வந்த பாதையில் பத்து நபர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு பட்டா வழங்கியதாகவும் அந்த இடம் சில ஆண்டுகளுக்கு முன் தரிசாக இருந்த நிலையில் தற்போது விவசாயம் நடந்து வருகிறது. இதனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஒருவர் இறந்த நிலையில் வயல் வழியாக விவசாய பயிர்களுக்கு இடையில் இறந்தவரின் உடலை கொண்டுசெல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆதிதிராவிடர் காலனியில் இருந்து 700 மீட்டர் தார்சாலை வழியாக சடலத்தை கொண்டு செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தும், வழக்கமான 300 மீட்டர் பாதை வழியாகத்தான் இறந்தவரின் உடலை கொண்டுசெல்வோம் என்று கூறியுள்ளனர். இதனால் மயானத்திற்கு செல்லும் பாதை வழியாக போடப்பட்ட பட்டாவை ரத்து செய்து மயாணத்திற்கு பாதை ஏற்படுத்தி சாலை வசதி செய்து தரக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆதிதிராவிடர் பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று காலை சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுடுகாட்டில் பந்தல் அமைத்து குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் அமைக்கப்பட்ட பந்தலை உடனடியாக அகற்றினர்,
இதையடுத்து சுடுகாட்டின் அருகில் 50-க்கும் மேற்பட்டோர் 5 தலை முறைகளாக நாங்கள் பயன்படுத்தி வரும் மயான பாதையை தமிழக அரசு தனிநபர்களுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் தீர்வு கிடைக்கும் வரை சுடுகாட்டிலேயே சமைத்து உண்டு காத்திருந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என முழக்கம் எழுப்பினர். சமத்துவ குடியிருப்பு இருப்பதை போன்று, தமிழக அரசு சமத்துவ சுடுகாடு அமைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் வரதராஜன் பேச்சுவார்த்தை நடத்திய போது இரண்டு மாத கால அவகாசம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை ஏற்காத போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுடுகாட்டிற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சுடுகாட்டில் குடியேறி நடத்திய போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.