ஹாத்ரஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கத்துள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளதால் நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், “மீட்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை. மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் காயமடைந்த 31 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை.
சம்பவத்தை நேரில் பார்த்த பலர் என்னிடம் பேசினார்கள். நிகழ்ச்சி நடந்து முடிந்து சொற்பொழிவாளர் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது, பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெறுவதற்காக முயன்றதாகவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த தன்னார்வ தொண்டர்கள், அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காவல் துறை கூடுதல் தலைவர் (ஏடிஜி) தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளோம். அது முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஆழமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளது. நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை நடைபெறும். நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த நீதி விசாரணைக் குழுவில் ஒரு அங்கமாக இருப்பார்கள்.
சம்பவ இடத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்வையிட சம்பவ இடத்துக்குச் சென்றேன். எங்கள் 3 அமைச்சர்கள் நேற்று முதல் அங்கு முகாமிட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநரும் இங்கு முகாமிட்டுள்ளனர். காவல் துறையின் மூத்த அதிகாரிகள், நிர்வாகப் பிரிவில் உள்ள மூத்த அதிகாரிகள் ஆகியோர் ஏற்கெனவே அங்கு முகாமிட்டுள்ளனர். சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை உறுதி செய்யும் திசையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
மாநில அரசும், மத்திய அரசும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விச் செலவை உத்தரப் பிரதேச அரசே ஏற்கும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.