நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி திமுக சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறுவது என்ற இலக்குடன் தமிழகம் முழுவதும் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக கையெழுத்துகள் பெறப்பட்டு, மத்திய அரசுக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையில் கடந்த 28ம் தேதி அன்று, நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
இதில், “நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு. சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை நீட் தேர்வு. சமத்துவம் இல்லாத தேர்வு முறை நீட் தேர்வு. கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை நீட் தேர்வு. மாணவர்களின் கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை நீட் தேர்வு” என கோஷங்கள் எழுப்பப்பட்டன.