விஷ சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போது தான் விழித்துள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கோவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு 60-க்கும் மேலான உயிர்களை இழந்துள்ளோம். விஷ சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழ கூடாது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், புதிய சட்டம் பாயுமா? விஷ சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போதுதான் விழித்துள்ளது. கல்வராயன் மலையில் ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. கிக் இல்லை என அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் மிக மோசமான கருத்தை பதிவு செய்வதும், மதுக்குடிப்பவர்கள் தானாக திருந்தினால்தான் பிரச்சினை தீரும் என ஒரு மூத்த அமைச்சரே சொல்வது கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் வரக்கூடாது என்பதற்காக அரசு டாஸ்மாக் நடத்தி வரும் நிலையில், ஒட்டுமொத்த மக்களையும் குடிகாரர்களாக மாற்றியுள்ளது இந்த அரசு. டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடை திறக்கும் அரசால் ஏன் காவல் நிலையங்கள் திறக்க முடியாது? தமிழ்நாடு எதை நோக்கி செல்கிறது? தமிழ்நாட்டு மக்கள் நல்ல ஆட்சி எது, நல்ல தலைவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் உயிருக்கு விலை இல்லை, பணம் மட்டுமே பிரதானம். சென்னை சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுவன் உயிரிழந்தான். சென்னை மாநகராட்சி எவ்வித செயல்பாடுமின்றி முடங்கியுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.