நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்தது குறித்து மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டது.
மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவை பாராட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, “இரண்டாவது முறையாக மீண்டும் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். தங்கள் இருக்கையின் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது. செங்கோல் அதிகாரத்தின் அடையாளம் அல்ல. யார் பக்கமும் சாயக்கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான நீதி தவறாமையின் அடையாளம் ஆகும்.
இந்த இருக்கையின் அழகே நீதி தவறாமை தான். கடந்த காலங்களில் நீங்கள் சிறப்பான சபாநாயகர் என்பதை நிரூபித்துள்ளீர்கள். ஆனால், ஆளுங்கட்சிக்கு ஒரு சார்பாகவும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வகையாகவும் அணுகியிருக்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆளும் கட்சி என்பது ஆட்சி அதிகாரத்தோடு இருக்கிற ஒரு வலுவான கட்சி. எனவே, ஆளுங்கட்சி சார்பு நிலை இருக்கக்கூடாது என்பதைதான் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கடந்த முறை பல்வேறு மசோதாக்களை பண மசோதா என்று ஆளுங்கட்சி அறிமுகப்படுத்தியது. எது பண மசோதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளுங்கட்சி, மீண்டும் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அத்தகைய முயற்சிக்கு நீங்கள் மீண்டும் வளைய கூடாது.
ஒரு மக்களவை தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் ஒரு ஓரத்தில் கொண்டுபோய் மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளதை, ஏற்கெனவே இருந்த இடத்தில் நிறுவ வேண்டும்” என்று பேசிக்கொண்டிருந்தபோதே திருமாவளவனின் மைக் அணைக்கப்பட்டது. மேலும் சபாநாயகர் ஓம் பிர்லா வேறு ஒருவரை பேச அழைத்தார். சபாநாயகரின் இந்த செயலால் எதிர்க்கட்சிகள் அதிருப்தியில் சத்தம் எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.