இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை உருவாக்கவே இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள சமூக அமைப்புகள், போதைப்பொருள் ஒழிப்பு தன்னார்வலர்கள் இந்த நாளையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை இன்றைய தினம் நடத்துகின்றனர்.
இந்த நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்திற்கு வாழ்த்துக்கள். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கு அரசு அனைத்து அணுகுமுறையுடன் இந்த இலக்கை அடைவதை நோக்கி முன்னேறி வருகிறது.
போதைப்பொருளின் கோரப்பிடியில் இருந்து தேசத்தை விடுவித்து, நமது வருங்கால சந்ததியினருக்கு சிறந்த உலகை பரிசளிக்க வேண்டும் என்ற உறுதியை நாம் அனைவரும் பலப்படுத்துவோம்” என்று அமித் ஷா கூறியுள்ளார்.