கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு 20-ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்தனர். கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 49 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களில் நேற்று வரை 19 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜான் பாட்ஷா இன்று காலை உயிரிழந்தார். இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.