கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரிக்கை : ஆளுநரிடம் இபிஎஸ் மனு

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பாக நேர்மையான, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் எம்.பி.,க்கள் உடன் இருந்தனர்.

பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த பழனிசாமி கூறியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்தால் நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரிக்கப்பட மாட்டாது. மேலும், இவ்வழக்கில் உண்மைத்தன்மை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசா ரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும். இந்த சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் போலீஸார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி 800-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

6000 மேற்பட்ட கள்ளச்சாரய ஊறல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதை முதலிலே செய்திருந்தால் இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்திருக்காது. மேலும் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சார விற்பனை அமோகமாக நடப்பதாகவும் அதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் கவன ஈரப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போதே இது குறித்து விவாதம் நடத்தி இருந்தால் இந்த மரணங்களை தடுத்திருக்கலாம்.

மேலும் கள்ளச் சாராய வியாபாரிகளுடன் காவல் துறைக்கு தொடர்பு இருப்பதால் மக்கள் ஏதாவது தகவல் தெரிவித்தால் அது உடனே கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு சென்று விடுகிறது. இதனால் அவர்கள் மக்களை அச்சுறுத்துகின்றனர். அந்த பயத்தில் தான் கள்ளச்சார விற்பனை குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்க மக்கள் அஞ்சுகின்றனர்.

இது போன்ற சூழலில் கள்ளச் சாராய மரணம் குறித்து நியாயமான நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்புலத்தில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவர வேண்டும் என்றால் வழக்கு சிபிஐ விசாரித்தாக வேண்டும். அதற்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்தோம். அவரும் அந்த மனுவை தீர ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.