கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததில், இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று ஆளுநர் மாளிகைக்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு கொடுத்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர்கள் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச் சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச் சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம்.
மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் இருப்பது பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும் ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அமைத்துள்ள சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சிபிஐ விசாரணையை நாங்கள் கோருகிறோம். கள்ளச் சாராயம் குடித்த பலர் உயிரிழந்துள்ளனர், பலரின் கண் பார்வை பறிபோயுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினோ, மதுவிலக்குத் துறை அமைச்சரோ சம்பவ இடத்துக்கு இதுவரை செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்வது, மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வது என்பதோடு இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள தமிழக அரசு முயல்கிறது. அவர்கள் உண்மையை மறைக்கிறார்கள். சிபிஐ விசாரணை நடந்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்பதால் ஆளும் தரப்பு அதனை எதிர்க்கிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் குறித்து நாங்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை எண்ணி அவர் மிகவும் கவலை அடைந்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்களை காவல்துறையினர் நடத்திய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பாஜக தொண்டர்களை குற்றவாளிகளைப் போல் காவல்துறையினர் நடத்தி உள்ளனர். பலரை கைது செய்துள்ளனர். ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை” என்று தமிழிசை தெரிவித்தார்.