கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு சிறப்பு நிதியை ஒதுக்கி அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு அரசு முன்வருமா என்றும், இன்று கல்வராயன் மலையை கள்ளச் சாராய மலை என்று அழைக்கும் நிலை உள்ளது. அதனை மாற்றி மக்கள் பயணிக்கின்ற, பயன்படுத்துகின்ற சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.
அதிகமான மக்கள் வந்துசென்றால் கள்ளச் சாராயம் போன்ற விஷயங்கள் தடுக்கப்படும். எனவே, கல்வராயன் மலையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நிதி ஒதுக்க அரசு முன்வருமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், “கல்வராயன் மலை என்பது மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாகும். அந்த இடத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். எனினும், அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப முதல்வரின் உத்தரவை பெற்று கல்வராயன் மலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.