புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் “சுய மற்றும் சமூகம்” என்பதாகும்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சே.நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவர் சரவணன் யோகாசனம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் யோகா செய்வதனால் உடல் மற்றும் மனம் வலிமை பெறும் என்றும் மேலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பது குறித்தும் எடுத்துரைத்தார். யோகா பயிற்சியாளர் இமயராணி பத்மாசனம், கோமுகாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களும் அவற்றின் பயன்கள் குறித்து கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். மாணவர்களும் அதைத் தொடர்ந்து யோகாசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ம.விஜயகுமார், வேங்கடலட்சுமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் செய்திருந்தனர். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சி செய்தனர்.