கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விவகாரத்தில் தெலங்கானாவில் இருந்து ரயிலில் மெத்தனால் கடத்தல் – போலீஸ் தகவல்

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து தற்போதுவரை 52 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மரக்காணம் கள்ளச் சாராய சாவில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த மரக்காணத்தைச் சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு, இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகியோரை போலீஸார் விசாரணை வளையத்துக்குக் கொண்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்த மெத்தனால், அங்கிருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டு, அவை விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது.

கள்ளகுறிச்சி அருகே கல்வராயன் மலையில் மூலிகைச் சாராயம் எனப்படும் கடுக்காய் சாராயம் கள்ளகுறிச்சிக்கு கொண்டு வரப்பட்டு போதை கூடுதலாக கிடைக்க மெத்தனால் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டதால்தான் இச்சம்பவம் நடைபெற்றது என்று தெரியவந்துள்ளது. கள்ளகுறிச்சியில் முதன்முதலில் கள்ளச் சாரயம் குடித்து உயிரிழந்த பிரவின் இறப்புக்கு சென்றபோது அங்கு குடித்த கள்ளச் சாராயமே பலரின் உயிருக்கு எமனாகியுள்ளது என்பதும், இதே சாராயத்தை குடித்துதான் பிரவின் உயிரிழதார் என்பதும் குறிப்பிடதக்கது.

எனவேதான் கள்ளகுறிச்சி மாவட்ட நிர்வாகம் மெத்தனால் அருந்தி உயிரிழதுள்ளனர் என்பதும், பொது மக்களுக்கு புரியும் வகையில் அதை விஷச் சாராயம் என்று கூறுகிறோம். மெத்தனால் கலக்காத கள்ளச் சாராயத்தை குடித்து இருந்தால் உயிரிழக்க வாய்ப்பு குறைவு என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.